வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Sunday, April 1, 2012

3- ஒரு மொக்க பிளேடு!


டைம்ஸ் ஆப் இந்தியாவில்  வந்த ஆகா ஓகோ விமர்சனத்தைப் படித்து காண்டாகிதான் இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்.  உலகம் முழுவதும் பிரபலமான கொலைவெறிப் பாடல், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கம், தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பு என பலத்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய படம். ஆனால் நாங்க அவ்வளவு ஒர்த் இல்லப்பா! என்று மேற்கண்ட அனைவரும் கோரசாக சொல்லியிருக்கின்றனர்  இந்த படத்தின் மூலம்.

கதை மற்றும் திரைக்கதை ;

12-வது படிக்கும்போது ஜனனியை (ஸ்ருதிஹாசன்) பார்க்கும் ராம் (தனுஷ்) என்கிற 17 வயது பருவ பையன் அவளது சைக்கிள் செயின் மாட்டி விடுகிறான். அவ்வளவுதான் எத்தனை தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்  அதே இது! அதுதாங்க காதல் அவனுக்கு வந்து விடுகிறது. பிறகு அவளை ஸ்கூல், டியூசன் என விரட்டி போகிறான். கூடவே சைடுவாத்தியமாய் அவனது நண்பன் இருக்கிறான். விடாமல் துரத்தி, ஜனனியின் அப்பாவிடம் ராம் அறை வாங்கி ஒரு வழியாக ஜனனிக்கும் காதல் பிறக்கிறது. வழக்கம்போல் இருவீட்டாருக்கும் விஷயம் தெரிகிறது. எதிர்ப்பை மீறி திருமணம் செய்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத திருப்பமாய் ராமிற்கு BIPOLAR DISORDER எனும் மன நோய்வருகிறது. அதற்கான சிகிச்சையை மனைவிக்கு தெரியாமல் நண்பணின் உதவியுடன் எடுத்துக்கொள்கிறார். இறுதியில் நோயின் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் நெருக்கமும் உருக்கமும் நிறைந்த காதல் கதையாக சொல்லப்படுகிற 3 படத்தின் கதை.

என்னைப் பொருத்தவரை மூன்று படத்தின் கதை ஒரு மொக்க பிளேடு;

தெய்வீகக் காதல், தெவிட்டாத காதல் காதலியின் மனம் கோணக்கூடாது என்ற எண்ணத்தில் மரணத்தின் எல்லை வரும் செல்லும் ஹீரோ இதெல்லாம் 1980-களிலேயே எனக்கு முந்தைய தலைமுறை பார்த்து ரசித்தாச்சுப்பா. ஆரண்யகாண்டம், Dev D மாதிரியான மரபை தகர்த்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களைக் கண்டு ரசிகர்கள் ஓரளவிற்காவது முழித்துள்ள நேரத்தில் இதெல்லாம் ஒரு கதைன்னு படம் எடுக்கறீங்களே? சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு. கொலவெறிப்பாட்டுல தமிழ் திரைப்பட பாடல்களின் மரபுகளை கொஞ்சம் உடைத்தமாதிரி கதையில் கொஞ்சம் உடைத்திருந்தால் வாழ்த்தியிருப்பேன். கதை திரைக்கதையில் ஓட்டைகள் இவ்வளவு இருத்தால் மற்ற விஷயங்களால் என்ன செய்ய முடியும்.



வழக்கமான தமிழ் சினிமாவின் அனைத்து ‘கிளிசே’க்களையும் இந்தப்படத்தில் பார்க்கலாம். ஹீரோவுக்கு காதல் வந்தவுடன் அவருடன் வரும் நண்பரின் கேரக்டராக வரும் சிவகார்த்திகேயனும் அப்படியே. ஆனால் அவரது வசனத்திற்கும் நடிப்பிற்கும் தியேட்டரில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சந்தானத்திற்கு பதில் சிவகார்த்திகேயன் என்பதையாவது குறைந்தபட்சம் யோசித்திருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் கேரக்டரும் ஆண்தானே ஸ்ருதி மாதிரியான பெண்மீதான பெண்மீது தனுஷ்க்கு மட்டும்தான் காதல் வருகிறது. ஏன்? ஹூரோவின் நண்பனுக்கு எதுவுமே வரமாட்டேங்கிறது?

மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் அப்பாவாக பிரபுவின் கேரக்டரும் அரதப்பழசு. படத்தில் எதாவது புதுசா வருமா என்று பார்த்தால் கடைசி வரை மிஸ்ஸிங்.

இந்தப்படத்தில் மூன்று விஷயங்கள் மட்டுமே மரபே மீறி எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று நாயகனின் குடும்பத்தை பணக்காரர்களாகவும்,  நாயகியின் குடும்பத்தை நடுத்தர வசதிப் படைத்த குடும்பமாகவும் காட்டி இருப்பது. வழக்கமான தமிழ் சினிமாவில் பணக்கார நாயகியை குடிசையில் இருக்கும் நாயகன்தான் விரட்டி விரட்டி காதலிப்பார்.

இரண்டு – PUB-ல் வைத்து தாலி கட்டுவது. திருமணம்கிறது ஆயிரங்காலத்து பயிர் என்ற வழக்கமான தத்து பித்து இல்லாமல் பப்-பில் வைத்து தாலி கட்டுவது அருமையான காட்சி. ஆனால் அதற்கு முன்பான காட்சிகளோ, கேரக்டரைசேசனோ இப்படி ஒருக்காட்சிக்கு அடித்தளம் இடவில்லை என்பது திரைக்கதையின் தவறு.



மூன்று ; சில சமயங்களில் ஸ்ருதியின் பாத்திரப்படைப்பு பெண்களில் பார்வையில் சில விஷயங்களைச் சொல்கிறது. ஆர்வமாக வந்து தனுசின் மடியில் அமர்வதாக இருக்கட்டும். பார்க்கும்போதெல்லாம் முத்தமிடுவதாக இருக்கட்டும் நாயகியின் பாத்திரப்படைப்பில் அவ்வப்போது பரவாயில்லை.

மற்றபடி வழக்கமான கதை வெறுப்பேத்துகிறது. தனுஷ் சாகும்போது நமது கணிகளில் கண்ணீர் வரவில்லை. அப்பாடி ஒரு வழியா செத்தானே என்று என்ன வைக்கும் திரைக்கதையை நினைத்தால் வெறுப்புதான் ஏற்படுகிறது.



 இசை மற்றும் பின்னணி இசை;

 படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் அனிருத் என்பது எனது கணிப்பு. பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன அல்லது எனக்கு பிடித்திருந்தன. பிண்ணனி இசையும் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப இருந்தது. ஆனால் காட்சிகள் மொக்கையாக இருக்கும்போது இசையை மட்டும் வைத்து என்ன செய்ய?
வசனம் ;

 வசனத்தில் சென்னை பசங்களின் வாழ்க்கையை எங்காவது இருக்கிறதா என்றால் மனதிற்கு எதுவும் ஞாபகம் இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு வெங்காயம் படமப் பார்த்தேன் அந்தப்படத்தின் மொழிவளமிக்க  வசனங்கள் பல இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கின்றன. மொக்க, பாங்கம் போன்ற சில வார்த்தைகளை வசனத்தில் சேர்த்தால் அது சென்னைப்படமாகி விடாது.

எடிட்டிங்;

எந்த ஒரு அடிப்படையும் இல்லாத கதையமைப்பைக் கொண்டு காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தால் எடிட்டர் என்ன செய்ய முடியும். பாத்திரப்படைப்புகளுக்கான காட்சிகளோ, படத்தின் முக்கிய திருப்பமான நாயகனின் தற்கொலைக்கான காரண காரிய காட்சிகளோ இல்லாதபோது எடிட்டர் வெறும் வெட்டி ஒட்டும் பணியை மட்டுமே செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு;

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய அருமையான படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர். தனுஷ் ஸ்ருதியை விரட்டும் காட்சிகளில் ஒளிப்பதிவு பரவாயில்லை. ஆனால் என்ன செய்வது இயக்குநரை மீறி என்ன செய்வார் பாவம்.
நடிப்பு;

தனுஷ்;

சொல்லத் தேவையில்லை. ஸ்கூல் பையனாகவும், ஸ்ருதியை விரட்டும்போதும், பின்னாடி மனப்பிரச்சினையால் தவிக்கும்போதும் நடிப்பை மிகையின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதியில் மனநோயாளியாக நடிக்கும்போது மயக்கம் என்ன பார்க்கிறோமா என்ற சந்தேகமே வந்து விட்டது. ஆனால் இயக்குநர் கொடுத்த பாத்திரத்தை என்றுமே கச்சிதமாக நடிக்கும் தனுஷ் அருமை.

சிவகார்த்திகேயன் ;வழக்கமான கதையை முன்பாதியில் காப்பாற்றுவது சிவகார்த்திகேயன்தான். எக்ஸ்பிரசன்ஸ் மற்றும்  புலம்பல்கள் காதலிப்பவர்களுடன் இருக்கும் நண்பர்களின் அவஸ்தையை ஓரளவிற்கு கொண்டு வந்தது.

ஸ்ருதிஹாசன்;

ஸகூல் பெண்ணாக, பள்ளி வயது தவிப்புடன் குறு குறு பார்வையுடன் ஸ்ருதிஹாசன்  ஸ்ருதி பிசகாமல் நடித்திருந்தார். கல்யாணமாகி நெருக்கம் காட்டும் காட்சிகளிலும் அவ்வளவு கச்சிதமான நடிப்பு. ஆனால்  தனுஷ் இறந்தபிறகு அழுது அழுது கடுப்பேத்துகிறார்.  தியேட்டரில் ரசிகர்கள் வெறுத்துபோய் அம்மா தாயே அழுதுகிட்டே இருக்காத என்று கத்தி தீர்த்தார்கள். அந்தளவுக்குஇரண்டாவது பாதியில் கடுப்பேத்தீட்டீங்க மை லார்ட்.

மற்றவர்கள்;

பிரபு, பானுப்ரியா, ரோகினி, தனுஸின் நண்பனாக வரும் போட்டோகிராபர் வெங்கட் ஆகியோருக்கு காட்சிகள் குறைவு. வெங்கட்டுக்கு இரண்டாவது பாதியில் ஏராளமான காட்சிகள் இருந்தாலும் சோகமாகவே முகத்தை வைத்துக்கொண்டிருக்க வேண்டி இருப்பதால் பெரிதாக சோபிக்கவில்லை.

 கலை ;
கலைக்கு பாடல்களில் மட்டும்தான் அதிகவேலை. வேறெங்கும் வேலை இருந்ததாக தெரியவில்லை.

 ஆகையால் நான் சொல்வதெல்லாம் மூன்று படம் நானும் டைரக்டர்தான் பார்த்துக்கோ எனபதற்கான படைப்பு. ஆனால் நமக்கானதல்ல. அல்லது எனக்கானதல்ல.

  

Sunday, January 15, 2012

மதுப்புட்டிகள் கவிழ்ந்து கிடக்கின்றன!

      மதுக்குடிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சாராயம் குடிப்போம் சந்தோசமாய் இருப்போம்! என்றுதான் நாங்கள் மதுக்கோப்பைகளைத் தட்டுவோம். செந்திலுடன் சரக்கடித்தால் பெரியார் சொன்னத எவன் புரிஞ்சிக்கிறான்? என்ற வசனம் இல்லாமல் முடிவதில்லை. கனகு! நம்ம வாழ்க்கைய நாமதான் பார்த்துக்கனும்! என்ற வசனமின்றி முடித்ததில்லை சுரேஷ். எனக்கு ஊற்றி கொடுத்து விட்டு, நான் குடிப்பதை பெருமிதத்துடன் பார்க்கும் சித்தப்பா! முடிவில் குழந்தையாகி சண்டையிடுவதுண்டு அல்லது அழுவதுண்டு. முதல்முறை குடித்து விட்டு பேராசிரியர் பத்மநாபன் நான் போதையாவா இருக்கேன் கனகு! எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். இப்படி மது + நான்+ மற்றவர்கள் என்ற கூட்டணி என்றுமே வெற்றிக்கூட்டணியாகவே இருந்திருக்கிறது.

  
பொதுவாக மதுவிருந்தில் கொள்கைகளுக்கும், சினிமாவிற்கும் 50-50 சதவீதம் அனுமதியுண்டு. கொள்கை பேசும்போது யார் வார்த்தை வழியாவது பெரியார் தாடியை நீவிக்கொண்டு எப்படியும் நுழைந்து விடுவார். பெரியார் சொல்லித் தொலச்சத படிச்சுத் தொலச்சுட்டோம் என்ன பன்றது இப்படித்தான் கொள்கையோட வாழனும். பெரியார் தி.க சார்புல குடியரசு இதழ் தொகுப்பு போடறாங்க பதிவு செய்துட்டேன் மாப்ள! என்று தொடங்குவார் செந்தில். மக்கள்ட்ட போயி கேளு மார்க்ஸ்-னா ஏதோ ஒரு யூனியன் லீடர்னு சொல்லுவான். மார்க்ஸ் சர்வ உலகத்துக்குமான மேதைன்னு யாருக்கு தெரியுது. மார்க்ஸியம்கிறது ஒரு இயற்கைத் தத்துவம் அதை யாரும் தவிர்க்க முடியாது என்று செந்தில் பேசத்தொடங்கினால் நாளையே புரட்சி வெடித்து விடும்போல் இருக்கும். முதலாளிகள் தங்களுக்கான சவப்பெட்டிகளை  தானே செய்து கொண்டு, அதன் உள்ளே போய் படுத்து கொள்வார்கள் என்று மார்க்ஸ் அப்ப சொன்னது இப்ப சரியா இருக்குது. அமெரிக்காவிலயும், ஐரோப்பாவிலயும் என்ன நடக்குது? மார்க்ஸ் சொன்னமாதிரிதானே நடக்குது? என்று செந்தில் கேட்கிற கேள்விக்கும், சொல்கிற கருத்துக்கும் என்றுமே பதிலோ, மாற்றுக் கருத்தோ இருந்தது இல்லை.

  
 அப்படியே மார்க்ஸிடமிருந்து பேச்சு சினிமா பக்கம் திரும்பும்.  உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரைக்கும் போகும் பேச்சு. ஒரு ஷாட்ல மெரட்டிட்டான் கனகு என்று தொடங்குவார்  சுரேஷ்.  seven samurai பாதிப்பு மிஷ்கினோட எல்லா படங்கள்ளயும் இருக்கு என்பார் ஆனந்த். தன்னோட எல்லா படங்கள்ளேயும் அன்பை மட்டும்தான் போதிச்சார் அகிரா குரசேவா என்று என்பங்கிற்கு நான் கொளுத்திப் போடுவேன். அப்படியே யார் யாரோ வருவார்கள் vittoria de sica, ritwik ghatak, Andrzej Wajda, francois truffaut  இப்படி ஜாம்பவான்கள் எல்லாம் சர்வசாதாரணமாக வந்து போவார்கள். Andrzej Wajda மாதிரி தமிழ்ல ஒரு political story பண்ணனும். அதுமட்டுமில்ல செமத்தையான political satire ஒன்னும் பண்ணனும்.... அந்தப்படம் மூலமா அரசியல்வாதிங்களோட டவுசரக் கழட்டனும்னு  முடிவெடுப்போம்.

      மது அருந்தும்போது தமிழ் பேராசிரியர் பத்மநாபன் இருந்தால் கொஞ்சம் இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கப்படும். சங்கப்பாடல் தொடங்கி நவீன இலக்கியம் வரை அலசி ஆராயபப்டும். உச்சி வெயிலில் பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதை சொல்லமுடியாத ஊமையைப் போல் தான் இருப்பதாக தலைவி கூறும்  அகநானூற்றுப் பாடலை பத்மநாபன் பாடத் தொடங்கினால், நாங்களும் காதலில் உருகுவோம். புதுமைப்பித்தன் இருமிச்  செத்தது முதல் ஆத்மநாம் தற்கொலை வரை நீளும் இலக்கிய விவாதம். தத்துவங்கள் பக்கமும் போவதுண்டு. நீட்சே, கெஹல், எக்ஸ்டென்சியலிசம் என்று எங்கேயோ செல்லும். மனிதன் இது அல்லது அது என ஏதாவது ஒரு முடிவெடுக்கவேண்டிய துன்பமான நிலையிலே இருக்கிறான் என்று பத்மநாபன் சொல்லும்போது எல்லோரும் அவரவர் வாழ்க்கைக்குள் சென்று இருப்போம்.


   நண்பர் யாசர் உடன் சரக்கடிக்கும்போது வேறொரு உலகம் தெரியும். BBC, tim sebastin. noam chomsky, p.sainath, karan thapar என நீளும் மீடியா கனவுகள் இறுதியில் கருகி விழும். நாம இங்க இருக்க கூடாதடா! நாம மக்கள நேசிக்கக் கூடாதடா! நமக்கு இப்போ எங்கேயும் role இல்லடா! நீ மாட்டு டாக்டராவே போயிடுடா! என்ற வருத்தத்துடன் முடிப்பார். இப்படி மதுக்கோப்பையுடன் உலகை அலசும் இரவுகள் பல கடந்து போய்விட்டன. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வெடித்துச் சிதறாமல் மதுப்புட்டிகள் கவிழ்ந்து கிடக்கின்றன.

Friday, December 24, 2010

வ - குவாட்டர் கட்டிங் எனக்கு பிடித்திருந்தது ஏன்?



     குவாட்டர் கட்டிங் என்ற பெயருக்கு ஏற்ற படம். படத்தின் டிரெய்லர் பார்த்ததில் இருந்து படம் என்று வெளியாகும் என்ற ஆர்வம் மனதில் இருந்தது. பிரெஞ்சு படங்களைப் போன்று மிக எள்ளலான தொணியில் இருந்ததே இதற்கு காரணம். அதன்பிறகு வந்த மீதி டிரெய்லர்களையும் பார்த்த பிறகு கொள்ளாத ஆர்வம் மனதில் கொளுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்தது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த பிறகுதான் ஆர்வம்   அடங்கியது. படம் எதிர்பார்த்தபடி ரகளையாகவே இருந்தது.  hangover, daytime drinking போன்ற படங்களைப் போன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நுழைந்தேன். படம் ஏமாற்றவில்லை.

 துபாய் செல்வதற்காக சென்னை வந்திறங்குகிற சுந்தர்ராஜன் என்கிற சுரா. தனது வருங்கால மச்சான் மார்த்தாண்டத்துடன் சேர்ந்து இரவு முழுவதும் ஒரு குவாட்டரைத் தேடி சென்னையில் அலைவதுதான் படத்தின் ஒன் லைன்.

தமிழர்கள் என்றுமே சந்தோசங்களை ஒருவித குற்ற உணர்வுடன்தான் அனுபவிப்பார்கள். அதில் மதுவும் ஒன்று. அப்படிப்பட்ட மதுவை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதற்காக இயக்குநர்களுக்கு ஒரு கட்டிங்கே  கொடுக்கலாம்.

சுற்றிலும் இடை சிறுத்த வெளுத்த பெண்களின் ஆட்டம், கைகளில் மதுபாட்டிலுடன் துபாய் ஷேக் ஆகும் கனவுடன் இருக்கும் சுராவிற்கு அதிர்ச்சி தகவலாய் தெரிய வருகிறது துபாயில்  இருக்கும் கட்டுப்பாடுகள். எனவே இங்கு கடைசியாய் ஒரு குவார்ட்டர் அடித்துவிட்டு விமானம் ஏறுவது என்ற முடிவுடன் கடையைத் தேடுகிறார்கள்.

தேர்தல் என்பதால் டாஸ்மாக் விடுமுறை. பிளாக்கில் வாங்க அலைகிறார்கள் அப்போது அவர்கள் சந்திக்கும் விசித்திர மனிதர்கள், விநோத சிக்கல்கள் என காட்சிப்படுத்தி கலக்கியிருக்கிறார்கள். பலவித  போராட்டங்களுக்கு பிறகு குவா ட்டரோ? கட்டிங்கோ கிடைத்ததா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

   மாட்டு டாக்டர் மார்த்தாண்டமும், சுராவும் படம் முழுக்க கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். காசிமேடு கருவாட்டுக் கடைக்காரர், வாகனங்களை கொளுத்தும் தீச்குச்சி ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சிங்காரி,  சுயேட்சை வேட்பாளர், மார்த்தாண்டத்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மக்கு மாணவி சரோ (லேகா வாசிங்டன்), சூதாட்ட கிளப் நடத்தும் பிரின்ஸ் அவனது அப்பா கிங்ஸ் (இரண்டு பாத்திரங்களும் ஜான்விஜய்) போன்றவர்கள் திரைக்கதையை நகர்த்துகிறார்கள்.

படம் பலருக்கும் பிடிக்கவில்லை.. பயங்கர flop என்று சொல்கிறார்கள். எனினும் எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதற்கான காரணங்கள் இதோ...

1. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அப்பாவி நாயகன், இங்குள்ள ரவுடிகளுக்கு சவால் விட்டு, நான்கு பக்க வசனம் பேசி நமது காதைக் கிழித்து தொங்கப்போட... நாம எப்படா? தியேட்டரில் இருந்து வெளியேறுவோம் என்ற சூழலில் சுபம் போடும் வழக்கமான கதையைத் தவிர்த்தது. 
2. இரவு 9.30 மணியிலிருந்து 10 மணிவரை டாஸ்மாக் அருகில் சென்றால் தெரியும். அபிமன்யூவே வந்தாலும் அந்த சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழைய முடியாது. அந்தளவிற்கு கூட்டம் நெரியும. அப்போது ஒரு குடிமகனுக்கு ஏற்படும் தவிப்பை நீட்டி முழக்கி கதையாக்கியிருப்பதற்காக.

3. படத்தின் ஒளிப்பதிவு அருமை. கதை இரவில் நடக்கும் படத்தில் கண்களுக்கு சலிப்பில்லாமல் அருமையான இருளும், ஒளியும் கலந்த ஒளிப்பதிவைத் தந்த தற்காக. படம் முழுவதும் கலை இயக்குநரும் மிகவும் வண்ணமயமான பின்னணியைத் தந்திருக்கிறார். இது மிகவும் சவாலான பணி என்றுதான் நினைக்கிறேன். என்னைவிட கூடுதலாக சினிமா அறிந்தவர்கள் விளக்கினால் சந்தோசப்படுவேன்.
4 . கண்கள் வழியோ அல்லது புறக்கடை வழியோ எப்படியாவது நுழைந்து விடும் காதல் காட்சிகள் இல்லாமல் இருந்ததற்கு. சென்னைக்கு வரும் நாயகன் இங்குள்ள பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றி, துபாய் செல்லாமல் தங்கி விடுவதுதானே தமிழ் திரைப்பட மரபு. அதை உடைத்ததற்காக.
5 .  படத்தின் பாடல்களும் எனக்கு மிகவும் படித்திருந்தது. குவாட்டரு! குவாட்டரு! என்ற பாடல் உற்சாக பானம்போல் இருந்தது. லேகா பாடும் மெலோடி கட்டிங் அடித்துவிட்டு அறைக்கு ஆளில்லா சாலையில் திரும்பும்போது ஏற்படும் உணர்வைப் போன்று மென்மையாக இருந்தது. கடைசிப்பாடல் சரியான குத்து.. அதன் வரிகளும் அசத்தல்.
6 . படத்தின் வசனங்கள் ஸ்டிரிக்ட்டாக காமெடி செய்தன. அதுவும் குவாட்டர் அடித்தே தீர வேண்டும் என்பதற்காக சிவா பேசும் வசனம்... என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா? என எண்ண வைத்தது. சிவா சரணின் மூக்கை உடைக்கும் வசனங்கள் நிஜமாலுமே குபீர் சிரிப்பை வரவழைத்தன.
7 . மாட்டு டாக்டரான சரணை மக்காக காட்டாமல், புத்திசாலியாக காட்டியதற்காக... அதுவும் சீட்டாட்டத்தில் கில்லாடியாக காட்டியது எனக்கெல்லாம் தனிப்பட்ட வித த்தில் பெருமை. தமிழ் சினிமாவில் தமிழ் வாத்தியாரையும், மாட்டு டாக்டரையும் கேவலமாகத்தான் சித்தரிப்பார்கள்.  அந்த கட்டுப்பெட்டித் தனத்தை உடைத்ததற்காக.

 ஆக இதுபோன்ற காரணங்களால் குவாட்டர் கட்டிங் எனக்கு பிடித்திருந்தது. படம் சரியாக போகாததற்கு காரணம் nativity இல்லாததுதான். தமிழ்நாட்டு குடிமகன்கள் ஒருமுறை பார்த்திருந்தால் கூட படம் வசூலை குவித்திருக்கும். என்ன செய்வது எல்லாம் காலத்தின் கோலம்!

Tuesday, November 30, 2010

ஷகிலாவுக்கு ஏன் விருதுகள் அளிக்கக் கூடாது?

      சாப்பாட்டை மறைத்து வைத்து சாப்பிடுவோம்.... ஆனால் நடுத்தெருவில் மலம் கழிப்போம்... இதுதான் நமது பொதுவான குணநலனாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் தற்போது ஷகிலாவைக் கேவலப்படுத்தும் தமிழ் திரைப்படங்கள் வடிவில் வந்துகொண்டிருக்கிறது. தூள் என்ற படத்தில் ஆரம்பித்து, ஜெயம் போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் வரை நிறையப்படங்களில் ஷகிலாவை மிகவும் கேவலமாக, இரட்டை அர்த்த பாணியில் கதாபாத்திரமாக உருவகித்து வருகிறார்கள். இது மல்லாக்க படுத்துக் கொண்டு மேல்நோக்கி எச்சில் துப்புவதற்கு சமமானது.

   நாம் மிகவும் மரியாதையாக வைத்து போற்ற வேண்டிய நடிகைகளில் முதன்மையானவர் ஷகிலா. காமப் பெருங்கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பலருக்கும் ஆறுதல் அளித்தவர் ஷகிலா. மற்ற நடிகைகள் தொப்புளைக் காட்டி, மார்பு கச்சையை சிறிதாக்கி நமது கற்பனையைத் தூண்டி வெறியேற்றனார்கள். ஷகிலா இது அவ்வளவுதான் என நம்மை சாந்தப்படுத்தினார். எனவே ஷகிலாதான் மதிக்கப்பட வேண்டியவர்.

   
ஒரு B-grade படத்தில் நடிப்பது மிகவும்  சிரமமான விஷயம். கண்ட இடத்தில் கை வைப்பார்கள், continuity, re recording. lighting  போன்ற இன்ன பிற இத்யாதிகளும் உண்டு. பணத்திற்காக வேறு வழியின்றி நடித்தவர்களுள் ஷகிலாவும் ஒருவர்.  அவரைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை... கேவலப்படுத்தமால் நல்ல கதா பாத்திரங்களையாவது அளிக்கலாம். ஒரு ஆணின் மன நிலையில் இருந்துதான் ஷகிலாவை கேவலப்படுத்தும் இதுபோன்ற பாத்திரங்களை வடிவமைக்கிறார்கள்.
ஷகிலா வரும் காட்சிகள் பெண்களுக்கு வெறுப்பையும் , ஆண்களுக்கு எள்ளல் உணர் வையும் ஏற்படுத்துகின்றன. இதுமிகவும் தவறான மனநிலை. ஒரு காலத்தில் மோகன்லால், மம்முட்டி படங்களை காலி செய்த பெருமை ஷகிலாவிற்கு உண்டு. இதன் உள் அர்த்தம் என்னவென்றால் பெரும்பான்மையானவர்கள் விரும்பி பார்த்தார்கள் என்பதுதான்.


எனது கல்லூரிக் காலங்களில் சனிக்கிழமையன்று இரவு ஷகிலா படம் பார்க்க கூட்டம் அலைமோதும். சூர்யா டி.வி.யில் வரும் ஷகிலா படமா, zee MGM-ல் வரும் ஆங்கிலப் படங்களா? என்ற பிரச்சினையே எழுந்த்துண்டு. ஷகிலாவின் ரசிகர்கள் மோதலுக்கே கூட தயாராக இருந்தார்கள்.  அரசின் மிரட்டலுக்கு பயந்து தற்போது ஷகிலா b-grade படங்களில் நடிப்பதில்லை. என்றாலும் என்னைப் பொருத்தவரை அவர் ஒரு legend. எனவே அவரை கேவலப்படுத்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தன்னை கேவலப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதை ஷகிலா அவர்கள் தவிர்க்க வேண்டும். ஷகிலா படங்களை பார்த்து ரசித்திராதவர்கள் மட்டும் அவரைக் கேவலப்படுத்தும் காட்சிகளுக்கு சிரிக்கலாம் என்றால், அது  அடுத்தவன் மனைவியை மனதில் நினைத்திராதவர்கள் மட்டும்  விபச்சாரியை நோக்கி கல்லெறியலாம் என்று ஏசுநாதர் கூறியதற்கு ஒப்பானதாக  இருக்கும்.